Thursday, October 25, 2012

தசரா விழா: குலசேகரன்பட்டினம் கோவிலில் நள்ளிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

தசரா விழா: குலசேகரன்பட்டினம் கோவிலில் நள்ளிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் தினமும் பல்வேறு தெய்வ கோலங்களில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடந்தது. இதையொட்டி இரவு 11 மணிக்கு அம்மனின் சூரசம்ஹார சூலாயுதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் நீண்ட ஜடாமுடி, கையில் சூலாயுதம், வாள் ஏந்தி தீய சக்திகளை அழிப்பதற்காக முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது கடற்கரையில் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் திரண்டிருந்த அம்மனை மகிஷன் சுற்றிச்சுற்றி வந்து கொக்கரித்தான். அடுத்ததாக சிம்ம தலையுடன் வந்தான். இறுதியில் மகிஷாசூரன் தலையுடன் வந்த சூரனை அம்மன் சம்ஹாரம் செய்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் 'ஓம்காளி, ஜெய்காளி' என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து கடற்கரை மேடைக்கு அம்மன் வந்ததும் அங்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அதன்பின்னர் தேரோட்டம் நடந்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும் வேடம் அணிந்த பக்தர்கள் கடலில் நீராடி வேடத்தை கலைத்தனர். காணிக்கையாக வசூலித்த பணத்தை கோவிலில் செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் அ.தி.மு.க. இளைஞர்மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில துணை செயலாளர் பி.ஆர்.மனோகரன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி (பொறுப்பு) தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

No comments:

Post a Comment