தமிழகத்தின் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வீதி உலாவும், 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதன் பின் 9 மணியளவில் கொடியேற்றப்பட்டது. கொட்டும் மழையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கொடியேற்றம் நடந்த பின்னர் காப்பு கட்டினர். மஞ்சள் கயிறால் ஆன காப்பை பூசாரி அவர்களுக்கு கட்டினார். வேடம் அணியும் பக்தர்கள் இன்று முதல் ஊர், ஊராக சென்று காணிக்கை பெறுவார்கள். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா களைகட்ட தொடங்கிவிட்டது. தசரா விழாவையொட்டி தொடர்ந்து 9 நாட்களுக்கு காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தினமும் இரவு 9 மணிக்கு அம்மன், சிம்மம், ரிஷபம், மயில், கற்பகவிருட்சம், காமதேனு, பஞ்சபரம், கமலம், அன்ன வாகனங்களில் துர்க்கை, விஷ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிஷாசுரமர்த்தினி, ஆனந்தநடராஜர், கஜலட்சுமி, கலைமகள் ஆகிய அலங்காரங்களில் வீதி உலா நடைபெறும்.
10-ம் திருநாள் (அக். 24-ந் தேதி) அன்று காலை 6 மற்றும் 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 10.30 மணிக்கு மஹா அபிஷேகமும் நடைபெறும். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைக்கு பின்னர் 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மறுநாள் நள்ளிரவு 1 மணிக்கு அம்மன் கடற்கரை மேடையில் எழுந்தருள்வார். அங்கு அம்மனுக்கு காலை 5 மணிவரை அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
வேடம் அணிந்து விரதம் கடைபிடித்த பக்தர்கள் காப்புகளை களைந்து தங்கள் விரதத்தை முடிப்பர். விழா நாட்களில் தினமும் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கோவில் கலையரங்கில் நடைபெறும்.
முத்தாரம்மனுக்கு எப்போது திருமணவைபவ நிகழ்ச்சி திருவிழா நடைபெறும்
ReplyDelete