Thursday, October 25, 2012

தசரா விழா: குலசேகரன்பட்டினம் கோவிலில் நள்ளிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

தசரா விழா: குலசேகரன்பட்டினம் கோவிலில் நள்ளிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் தினமும் பல்வேறு தெய்வ கோலங்களில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடந்தது. இதையொட்டி இரவு 11 மணிக்கு அம்மனின் சூரசம்ஹார சூலாயுதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் நீண்ட ஜடாமுடி, கையில் சூலாயுதம், வாள் ஏந்தி தீய சக்திகளை அழிப்பதற்காக முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது கடற்கரையில் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் திரண்டிருந்த அம்மனை மகிஷன் சுற்றிச்சுற்றி வந்து கொக்கரித்தான். அடுத்ததாக சிம்ம தலையுடன் வந்தான். இறுதியில் மகிஷாசூரன் தலையுடன் வந்த சூரனை அம்மன் சம்ஹாரம் செய்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் 'ஓம்காளி, ஜெய்காளி' என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து கடற்கரை மேடைக்கு அம்மன் வந்ததும் அங்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அதன்பின்னர் தேரோட்டம் நடந்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும் வேடம் அணிந்த பக்தர்கள் கடலில் நீராடி வேடத்தை கலைத்தனர். காணிக்கையாக வசூலித்த பணத்தை கோவிலில் செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் அ.தி.மு.க. இளைஞர்மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில துணை செயலாளர் பி.ஆர்.மனோகரன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி (பொறுப்பு) தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Monday, October 22, 2012

மாடசாமியை ஆட்கொண்ட அம்மன்


மாடசாமியை  ஆட்கொண்ட அம்மன்மாடசாமி என்பவர் நெல்லை மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வந்த ஒரு போலீஸ்காரர். ஒரு தடவை அவர் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவுக்காக காவல் பணி மேற்கொள்ள சென்றிருந்தார். தரிசனத்துக்கு வரிசையில் நிற்கும் பக்தர்களை கண்காணிëத்து ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

 
ஆடல்,பாடல் என ஆரவாரமாக வந்த பக்தர்களை சமாளிëக்க முடியாமல் அவர் திணறியபடி இருந்தார். அப்போது பரமசிவன் வேடம் அணிந்து வந்த பக்தர் ஒருவர் கூட்டத்தினுள் அதிரடியாகப் புகுந்தார். இதனைëக்கண்டு கோபம் அடைந்த காவலர் மாடசாமி சிவன் வேடமணிந்த அந்த பக்தரை இழுத்துத் தள்ளினார். இதனால் நிலை குலைந்து போன அந்த பக்தர் கீழே விழுந்து காயமடைந்தார்.
 
இந்த சம்பவம் நடைபெற்ற அன்றிரவு, காவலர் மாடசாமிக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் பார்த்தும் அந்த வலி மறையவே இல்லை. நாட்கள், மாதங்கள் என்று கடந்தும் வலி மட்டும் குணமாகவே இல்லை. இறுதியில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர்.
 
அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே இந்நோய் தீரும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதைக்கேட்டு மாடசாமியின் மனைவிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது திடீரென்று அவருக்கு அம்பாளின் அருள் வந்தது.
 
சாமி ஆடியபடி அவர் மிகுந்த ஆவேசத்துடன் தன் கணவரை நோக்கி, "மகனே! இந்நோய் உனக்கு எதனால் ஏற்பட்டது என்று இன்னும் புரியவில்லையா தசரா விழாவின் போது எனது பக்தன் ஒருவனைக்கீழே தள்ளி அவன் மனம் நோகும்படிச் செய்தாயே, நினைவில்லையா அதனால் தான் இந்த நோய்க்கு நீ ஆட்பட்டுள்ளாய். குலசைக்கு வந்து என் பாதம் பணிந்து வணங்கு உன் நோய் குணமாகும்'' என்று கூறினார்.
 
இதைக்கேட்டதும் திகைத்துப்போன மாடசாமி உடனே மருத்துவர்களிடம் "தனக்கு அறுவைச் சிகிச்சை வேண்டாம்'' என்று கூறி விட்டு, குலசைக்கு ஓடினார். அன்னையை மனமுருகி வேண்டி, தரிசனம் செய்து, அர்ச்சகரிடம் விபூதி பெற்றார். அதன் பின்னர் தான் அந்த அதிசயம் நடந்தது.
 
முத்தாரம்மன் ஆட்கொண்டதால் அவரை வருத்திக் கொண்டிருந்த வயிற்று வலி முற்றிலுமாகக்குணமானது. அது முதல் ஆண்டு தோறும் காப்புக்கட்டி, விரதமிருந்து, சிவன் வேடமணிந்து அன்னையின் அருளை மாடசாமி பெற்றார்.

முத்தாரம்மன் பெயர் வந்தது எப்படி?


முத்தாரம்மன் பெயர் வந்தது எப்படி?அகிலத்தை படைத்து காத்து ரட்சித்து அருளும் அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு திருநாமங்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன் பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது. `பாண்டி நாடு முத்துடைத்து' என்பார்கள்.

 
பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக பாவித்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து.  பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள்.
 
அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து  ஆற்று  அம்மன், முத்தாரம்மன் எனஅழைக்கப்படுகிறாள். சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது.
 
உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து பிரித்துச் சீவன் முத்தர்களாக மாற்றுகிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் நிலைக்கலாயிற்று.
 
நவமணிகளில், (முத்து, மரகதம், பச்சை, புஸ்பராகம், நீலம், வைடூரியம், பவளம், மாணிக்கம், வைரம்) முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமலேயே தானே ஒளிவிடும் தன்மையுடையது. இங்கே அம்பாள் சுயம்புவாகத் தோன்றி உலகைக் காப்பதால் முத்தாரம்மன் எனவும் சிறப்பிக்கப்படுகிறாள். அவள் தாள் பணிந்தால் நம் வாழ்வும் முத்து போல் பிரகாசிக்கும்.

அம்பாள் சிலை உருவான வரலாறு


அம்பாள் சிலை உருவான வரலாறுகுலசேகரப்பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அப்போது அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது. அம்பாளிடம் இதற்காக மனமுருகி அவர்கள் வேண்டினர். அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள்.

 
"எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிற்றூர் உள்ளது. அங்கு செல். அனைத்தும் நிறைவேறும் என்று கூறினாள் மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை  வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள் சிலைகளை நிறைய பேர் செய்து வருகின்றனர்.
 
இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார். அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். குலசேகரன் பட்டினத்தில் தான் சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள்.
 
அதுமட்டுமல்லாமல், தன் உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத் தெரியப்படுத்தினாள். பின்னர், தனது மற்றும் சுவாமியின் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள்.
 
தங்கள் சிலைகளைச் செய்து, தாங்கள் சுயம்புவாக முளைத்துள்ள இடத்திற்கு அருகாமையில் அந்தக் கற்சிலையை நிறுவ வேண்டும் என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள். இந்தக் கனவு கலைந்ததும் திடுக்கிட்டார் ஆசாரி. கனவில் முத்தாரம்மன் தனக்கு ஆணை பிறப்பித்ததை உணர்ந்தார்.
 
குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார். முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர், அவ்வூரைச் சேர்ந்தச் சிலருடன் மைலாடி சென்றார்.
 
சுப்பையா ஆசாரி பற்றி விசாரித்து அறிந்து அவரைச் சந்தித்தார்கள். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார். அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர். முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
 
இந்த அன்னைதான் குலசேகரன் பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தி வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இதுபோல் அம்பாளும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.
 
மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது. மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும். இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது *

முத்தாரம்மன் உருவ அமைப்பு


முத்தாரம்மன் உருவ அமைப்புகுலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சுயம்புவாகத் தோன்றியதோடு தன் உருவத்தை தானே தீர்மானித்துக் கொண்டவள் என்ற சிறப்பைப் பெற்றவள். தமிழ்நாட்டில் எந்த சக்தி தலத்திலும் அம்பாள் நடத்தாத அற்புதம் இது. லட்சோப லட்சம் பக்தர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ள குலசை முத்தாரம்மன், தன் மீது ஆழ்ந்த பற்று வைத்துள்ள பக்தர்கள் கனவில் தோன்றி உத்தரவிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளாள்.

 
தமிழ் நாட்டில் வேறு எந்த அம்மன் ஆலயத்திலும் இந்த அற்புதங்கள் நீடிப்பதாக தெரியவில்லை. இவ்வளவு மகிமை வாய்ந்த முத்தாரம்மனின் உருவ அமைப்பு எழில் மிகுந்தது. அவள் உருவ அமைப்பு ஒவ்வொன்றும், பக்தர்களுக்கு ஒவ்வொரு வகையில் அருள் செய்யக் கூடியதாகும். அது மட்டுமல்ல முத்தாரம்மனின் வடிவமைப்பு மானிடர்களின் தோஷங்களை நீக்கும் ஆற்றல் படைத்தது.
 
குலசை முத்தாரம்மன் தனது தலையில் ஞானமுடி சூடி உள்ளாள். கண்களில் கண்மலர், வீரப்பல், கழுத்தில் பொட்டுத் தாலி, மூக்குத்தி மற்றும் புல்லாக்கு ஆகியவற்றோடு காட்சியளிக்கிறாள். முத்தாரம்மனுக்கு நான்கு கைகள் உள்ளன. வலப்புற மேல் கையில் உடுக்கை உள்ளது. கீழ் கையில் திரிசூலம் இடம் பெற்றுள்ளது. இடப்புற மேல் கையில் நாகபாசம், கீழ் கையில் திருநீற்றுக் கொப்பரை உள்ளன.
 
முத்தாரம்மனின் ஞான முடி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய சக்திகளை கொண்டது. உயிர்களுக்குச் செய்ய வேண்டியதை அம்பாள் அறிவாள் என்பதே இதன் தத்துவமாகும். முத்தாரம்மனின் கண்கள் மலர் போன்றது. அந்தக் கண்கள் மூலம் அனைத்து உயிர்களையும் உற்று நோக்கி, அவை அனைத்திற்கும் வீடு பேறு அளிப்பதையே கண் மலர் குறிக்கிறது.
 
சிவ ஆகமங்களில் கூறிய நீதியைக் கடைப்பிடித்து வாழாதவர்களை கண்டு பிடித்து தண்டித்து ஆட்கொள்ளும் கருணையைக் குறிக்கும் விதமாக அன்னையின் வீரப்பல் அமைந்துள்ளது. அம்பாள் பொட்டுத் தாலி அணிந்திருப்பதன் காரணம் என்னவென்றால், சூரியனும், ஒளியும் எப்படிப் பிரிவின்றி ஒருமித்து நிற்கின்றதோ, அதுபோல இறைவனும், இறைவியும் பிரிவின்றி சேர்ந்து இருப்பதை உணர்த்துகிறது.
 
சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்றும் தாமே ஒளிவிடும் ஆற்றல் படைத்தவை. அவற்றிற்கு ஒளியைத் தனது மூக்குத்தி மூலமே அன்னை வழங்கி வருகிறாள் என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் அணிந்திருக்கும் புல்லாக்கிற்கும் ஒரு காரணம் உண்டு. உலகில் உள்ள அனைத்தையும் அன்னைதான் இயக்குகிறாள் என்பதையே அம்மன் அணிந்துள்ள புல்லாக்கு குறிக்கிறது.
 
முத்தாரம்மனின் கைகள் நான்கில், வலப்புற மேல் கையில் ஏந்தியுள்ள உடுக்கையில் இருந்து எப்போதும் `ஓம்' என்ற பிரணவ மந்திரம் ஒலித்தவாறே இருக்கும். `ஓம்' என்ற எழுத்தில் ஐந்து தமிழ் எழுத்துக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. அதாவது, படைத்தல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலைக் குறிப்பதாகவே இந்த `ஓம்' அமைந்துள்ளது. அன்னையின் மற்றொரு கையில் திரிசூலம் உள்ளது.
 
சூலத்தின் மூன்று தலைகளில் நடுத்தலை ஞான சக்தியையும், மற்ற இரு தலைகளும் இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தியையும் குறிக்கின்றன. முத்தாரம்மனின் இடது புறமேல் கையில் நாகபாசம் உள்ளது. நாகம் என்றால் மேலானது என்று பொருள். பாசம் என்றால் கட்டு என்று அர்த்தம்.
 
அதாவது, மண்ணிலும், அழுக்கிலும் கிடந்த குழந்தையைக் கருணையுடன் தன் கரங்களால் தொட்டுத் தூக்கி, சுத்தம் செய்வதைப் போல, ஆணவ குப்பையில் கிடந்து உழலும் உயிர்களைப் பாசத்துடன் எடுத்து உதவிகள் பலசெய்து, வீடுபேறு வழங்குவதைத்தான் நாகபாசம் குறிக்கிறது. அம்மனின் கீழ் கையில் திருநீற்றுக் கப்பரை உள்ளது.
 
பிறவிப் பெருங்கடலைக் கடக்க, படகு போன்ற இத்திருநீற்றுக் கப்பரை உதவும் என்பதே அதன் ஒப்பற்ற தத்துவம். இந்த திருநீற்றுக் கப்பரையில் நந்தி, நாகம், சிவலிங்கம், திரிசூலம், பொம்மை ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அனைத்து உயிர்களுக்கும் முத்தாரம்மன் பதினாறு செல்வங்களையும் இடையறாது வழங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை நந்தி குறிக்கிறார்.
 
உலகைத் தாங்கி நிற்கும் அனந்தன் போல தானும் உலகைக் காத்து நிற்பதை நாகம் குறிக்கிறது. சிவலிங்கம் என்பது பிரம்ம பாகம், திருமால் பாகம், உருத்திர பாகம், ஆவுடை பாகம் என்ற நான்கு பாகங்களை உடையது. பிரம்மா, திருமால், உருத்திரன், சக்தி ஆகிய நான்கும் ஒருங்கிணைந்த இந்த சிவலிங்கம், போகலிங்கம் எனப்படும்.
 
இவற்றின் மூலம் அன்னை போகங்களை வழங்கி வருகிறாள் என்பது இதன் பொருளாகும். உயிர்கள் அனைத்துக்கும் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவை உள்ளன. இவற்றிற்குத் தாமே இயங்கும் சக்தி கிடையாது. இதனை அம்பாள் முத்தாரம்மன் தன்னுடைய சக்தியால் இயங்க வைக்கிறாள். இதனை உணர்த்துவதே திரிசூலம் ஆகும்.
 
மேலும், திருநீற்று கப்பரையில் அமைந்துள்ள பொம்மை, ஒரு குழந்தை வடிவத்தை ஒத்திருக்கிறது. அதாவது தூய்மையான வெள்ளை உள்ளம் கொண்டவர்களிடம் அன்னை குடிகொண்டிருக்கிறாள் என்பதே இதன் தத்துவம். இதுபோன்று பல்வேறு பொருள் பொதிந்த காரணங்களுடன் முத்தாரம்மன் இத்திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்கிறாள்.

என்ன பிரச்சினையாக இருந்தாலும் முத்தாரம்மன் முடித்து வைப்பாள்!


உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு நோய் இருந்து கொண்டே இருக்கும். எந்த டாக்டராலும் குணமாக்க முடியாத படி நோய் நீடித்தப்படி இருக்கும். சிலர் எந்த வியாபாரம் செய்தாலும் நஷ்டம் ஏற்பட்டு தவிப்பார்கள். சிலர் எல்லா வசதியும் பெற்றிருப்பார்கள்.

முத்தாரம்மன் வரலாறு 
ஆனால் மனதில் நிம்மதி இருக்காது. வறுமை, கடன்தொல்லை, அண்ணன்-தம்பி தகராறு, சொத்து பிரச்சினை, வேலையில் நிம்மதியின்மை, உரிய வயதில் திருமணம் நடக்காதது, வீண்பழி, கொடுத்த பொருள் திரும்பி வராதது என்று எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். இந்த பிரச்சினைகளை எதிர் கொள்ள தெரியாமல் சிலர் தற்கொலை செய்து விடலாமா என்று கூட கோழைத்தனமாக நினைப்பதுண்டு.
 
இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தையும் குலசை முத்தாரம்மன் முடித்து வைப்பாள். அவள் சன்னதியில் நின்று ஒரு நிமிடம் மனம் உருக, உங்கள் பிரச்சினையை சொல்லி விட்டாலே போதும், மறு வினாடியே உங்கள் மனம் லேசாகி விடும். உங்கள் குறைகளை முத்தாரம்மன் தன்னகத்தே எடுத்துக் கொண்டு உங்களுக்கு நிம்மதி தருவாள்.
 
மனநலம் பாதிப்பிற்குள்ளானவர்கள் இங்கு வந்து அம்பாள் முன் நின்றாலே, குணமுண்டாகும். மனநலம் பாதித்தவர்களுக்கு இங்கு பிற இடங்களைப் போன்று கயிற்றால் கட்டிப் போடுதல் போன்ற சிகிச்சைகள் எதுவும் கிடையாது. ஆனால், பாதிப்படைந்தோரை இந்த ஆலயத்திற்கு அழைந்து வந்து, அம்பாளை மனமுருகி வேண்டினால், முத்தாரம்மன் அருள் உடனே கிடைக்கும். மனநலம் சரியாகி விடும்.
 
இது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், மனநோய் கண்டவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். அம்பாளின் அருள் கிடைக்கப்பெற்று நோய் தீர்ந்து திரும்புகின்றனர். அது போல தொழு நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் குலசேகரன்பட்டினம் சென்று முத்தாரம்மனை வழிபட்டால், நோய் குணமாகும்.
 
அம்பாளின் அருளினால்,மீண்டும் பழைய நிலையை அவர்கள் அடைய முடியும். இது போன்று அம்பாளைத் தொழுது, தொழு நோய் குணமாவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி அனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மனை நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும்.
 
அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், குலசை முத்தாரம்மனிடம் உங்களையே ஒப்படைத்து விடுங்கள். தாயே நீயே கதி என்று சரண் அடையுங்கள். அவள் மீது முழுமையான பற்றும், பாசமும், பக்தியும் கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருக்கும் அத்தனை கவலைகளையும் இறக்கிவைக்க அவள் ஆலயத்தை நோக்கி புறப்படுங்கள்.
 
உங்களைப் போன்றவர்களின் துக்கங்களை, துயரங்களை, போக்குவதற்காக குலசை முத்தாரம்மன் காத்திருக்கின்றாள். முத்தாரம்மன் உங்கள் மனதை மிகவும் லேசாக்கி அனுப்பி வைக்கும் ஆற்றல் படைத்தவள். அவளின் கருணைப் பார்வையிலேயே உங்கள் கவலைகள் அனைத்தும் கண நேரத்தில் காணாமல் போய் விடும். இந்த யதார்த்த உண்மையை எண்ணற்ற பக்தர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.

முத்தாரம்மன் வரலாறு


முத்தாரம்மன் வரலாறுநெல்லையில் இருந்து சுமார் 68 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினம். திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. குலசேகரப் பட்டினத்தில் பல கோவில்கள் அமைந்துள்ளன. என்றாலும் முத்தாரம்மன் கோவில் என்றால் தென் தமிழகத்தில் தெரியாத மக்களே இருக்கமாட்டார்கள்.

 
காரணம் மைசூருக்குப் பிறகு தசரா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது இந்தத் தலத்தில்தான். இத்தலம் முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இறைவிட சுயம்புவாக தோன்றிய இந்த ஆலயத்தில் ஞானமூர்த்திஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் முத்தாரம்மனை மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
 
எனினும் குலசேகரப்பாண்டியன் ஆட்சி காலத்தில்தான் இக்கோவிலுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு ஏற்பட்டது. ஒருநாள், மன்னரின் கனவில் தோன்றிய அம்மன் இந்த சிறிய ஊரை உலகறியச் செய்யுமாறு பெரிய நகரமாக மாற்று என்று ஆணையிட்டாள். அவளின் கட்டளையை ஏற்று குலசேகரப் பாண்டியன் அம்பாளுக்கு கோவில் கட்டினான்.
 
பின்னர், அவளுக்குச் சிறப்பான பூஜைகளைச் செய்து வழிபடத் தொடங்கினான். இதனைப் பார்த்த மக்களும், இங்கு திரண்டு வந்து வழிபடலாயினர். இதனையடுத்து முத்தாரம்மனின் சக்தி அனைவருக்கும் தெரியவரவே இந்த ஊர் பெருமைமிக்கதாக விளங்கத் தொடங்கியது என்று சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன.
 
இங்கு அம்பாள் சும்புவாகத் தோன்றி எழுந்தளியுள்ளார் என்பது மிகப்பெரும் சிறப்பு. சுயம்புவாக லிங்கம் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது. பெரும்பாலான இடங்களிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அம்பாள் சுயம்புவாக இங்கு தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனாலேயே இங்கு அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தவளாகக் காட்சியளிக்கிறாள்.
 
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் இருந்தால் இதனைப் பரிவர்த்தனை யோகம் என்று கூறுவர். அதேபோல இச்சன்னதியில் சுவாமியின் ஆற்றலை அம்பாள் வாங்கி இருக்கிறாள். எனவே அம்பாள் சிவமயமாகக் காட்சி தருகிறாள். இத்துடன் இல்லாமல், அம்பாளின் ஆற்றலை சிவனும் வாங்கியுள்ளார்.
 
அதனால் இங்கு சிவன் சக்திமயமாகக் காட்சி தருகிறார். இதனைப் பரிவர்த்தனை யோகநிலை என்று கூறுவர். இப்படியொரு அதிசய சக்தி இத்தலத்தில் அமைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் இத்திருத்தலத்தில் அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் ஆகிய தலங்களில் அன்னையின் ஆட்சியே நடைபெற்று வருகிறது.
 
இந்த 3 ஆலயங்களிலும் கோவிலில் மந்திரம், எந்திரம், தந்திரம் என்று மூன்று முக்கிய விஷயங்கள் தற்போதும் கடைப்பிடிக்க ப்பட்டு வருகின்றன. இதில் மந்திரம் என்பது அன்னையைத் துதிக்கும் தோத்திரம்.
 
எந்திரம் என்றாலும் சுவாமி சிலைகள் ஸ்தாபிக்கப்படும்போது, சிலைக்கு அடியில் மருந்து சாத்தி வைக்கப்படும் செப்புத் தகடு ஆகும். தந்திரம் என்பது அங்கு நடைபெறும் பூஜை முறைகள் ஆகும். இதே முறைகள் சற்றும் மாறாமல் குலசேகரன்பட்டினம் திருத்தலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

20 லட்சம் பேர் திரளும் தசரா திருவிழா


10 லட்சம் பேர் திரளும் தசரா திருவிழாதசரா திருவிழா உலகப் புகழ்பெற்ற ஒரு திருவிழாவாகும். கர்நாடக மாநிலம் மைசூரில் இந்த திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மைசூருக்கு அடுத்தப்படியாக குலசேகரப்பட்டினத்தில்தான் தசரா திருவிழா மிகவும் கோலாகலமாக  நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டமே குலுங்கும் வகையில் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவுக்கு 20 லட்சம் முதல் 25 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள். தசரா திருவிழா தினத்தன்று குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளிக்கும்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் விதம், விதமான வேடத்தில் வந்து குலசையை குதூகலப்படுத்துவார்கள். ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக மேளம் முழங்க வட்டம், வட்டமாக நின்று ஆடுவதை காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். உலகில் எங்குமே காண இயலாத விமரிசையான விழா இது.
ஆன்மீகமும், கிராமிய கலைகளும் ஒருங்கிணைந்த இந்த தசரா திருவிழா ஆண்டுக்கு ஆண்டு அதிக பக்தர்களை ஈர்த்து வருகிறது. குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-வது நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். அன்றுதான் குலசைநகரம், மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்.
இந்தத் திருவிழாதான் குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் மிகவும் பிரசித்து பெற்ற திருவிழாவாக விளங்கி வருகிறது. இவ்விழா நடத்தப்படுவதற்கு காரணமாக ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. வெகு காலத்திற்கு முன்பு வரமுனி என்ற பெயருடைய முனிவன் ஒருவன் இருந்தான். தவ வலிமை மிகுந்து காணப்பட்ட அவன் ஆணவம் கொண்டவனாக இருந்தான். ஒருநாள் அவன் இருப்பிடம் வழியாக அகத்திய முனிவர் சென்றார்.
ஆனால் வரமுனி, தனது ஆணவத்தின் காரணமாக அவரை மதிக்கத் தவறினான். அதோடு அவரை இகழ்ந்து பேசி ஏளனமும் செய்தான். இதனால் அகத்தியர் கோபம் கொண்டார். எருமைத்தலையும், மனித உடலும் பெறக்கடவது என்று அவனுக்கு சாபம் விட்டார். அத்துடன் அம்பாளால் நீ அழிவாயாக என்றும் சபித்தார்.
அகத்தியர் முனிவரின் சாபம் பலித்தது. எருமைத்தலையும், மனித உடலுமாக வரமுனி மாறினான். எனினும் அவன் விடா முயற்சி செய்து, கடும் தவம் புரிந்தான். அதன்மூலம் பல வரங்களைப்பெற்றான். மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையூறுகளை செய்யத் தொடங்கினான். நாளடைவில் அவன் அசுரனாகவே மாறிப்போனான்.
இதனால் மகிசாசுரன் என்று அழைக்கப்பட்டான். மகிசம் என்றால் எருமை என்று பொருள். சுரன் என்றால் அசுரன் என்று அர்த்தம்.  எருமைத்தலை கொண்ட அசுரன் என்பதால் மகிசாசுரன் என்ற பெயரே அவனுக்கு நிலைத்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த அவனது தொல்லைகளால் தாங்க முடியாத இன்னல்களுக்கு முனிவர்கள் ஆளானார்கள்.
அன்னையை நோக்கி வேள்விகள் நடத்தினர். கடும் தவம் புரிந்து, மகிசாசுரனின் அக்கிரமங்களை நீக்கித் தருமாறு அன்னையிடம் வேண்டினர். முனிவர்களின் கடும் தவம் அன்னையின் மனதை இளகச் செய்தது. மாமுனிவர்களின் வேள்விக்கு மகிசாசுரனால் எந்தவொரு இடைïறும் ஏற்படாத வண்ணம், அதனைச் சுற்றிலும் பிரம்மாண்டமான அரண் ஒன்றை அன்னை அமைத்துத் தந்தாள்.
இதனால் பெரிதும் மகிழ்ந்துபோன முனிவர்கள் தங்கள் வேள்வியை முறைப்படி மிக சிறப்பாக நடத்தினர். அந்த வேள்வியின் பயனாய், அழகிய பெண் குழந்தை ஒன்று தோன்றியது. அதற்கு லலிதாம்பிகை என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தக் குழந்தை ஒன்பது நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து பத்தாம் நாள் அன்னை பராசக்தியின் வடிவினை எடுத்தது.
பின்னர் மகிசாசுரனின் கொடூர செயல்களுக்கு முடிவு கட்டும் விதமாக அவனை அழித்தாள் லலிதாம்பிகை. இந்தப் புனித நாள் தசரா பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை பராசக்தி, வேள்வியில் வளர்ந்த ஒன்பது நாட்களும் நவராத்திரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்விழாவின் முதல் மூன்று நாட்களும் மலைமகளுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அடுத்த மூன்று நாட்கள் அலைமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கலைமகளுக்கும் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. மகிசாசுரனை அன்னை வென்றதால் அவளை மகிசாசுரமர்த்தினி என்றழைக்கின்றனர். புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு மறுநாள் கொடியேற்றத்துடன் தசரா பண்டிகை கோலாகலமாகத் தொடங்கும்.
கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும். முதல் நாளில் அம்பாள் துர்க்கை கோலத்தில் காட்சி தருவாள்.
இரண்டாம் நாள் விசுவ கர்மேஸ்வரர் கோலத்திலும், மூன்றாம் நாள் பார்வதி கோலத்திலும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், ஐந்தாம் நாள் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், ஆறாம் நாள் மகிசாசுரமர்த்தினி யாகவும், ஏழாம் நாள் ஆனந்த நடராசராகவும், எட்டாம் நாள் அலைமகள் கோலத்திலும், ஒன்பதாம் நாள் கலைமகள் கோலத்திலும் காட்சியளித்து வீதிஉலா வருகிறாள்.
பத்தாம் நாள் பிற்பகலில் தசமி திதியில் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகிசாசுர சம்ஹாரத்திற்காக கொண்டு செல்லப்படும் சூலத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பிறகு, மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்டு, கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேசுவரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்பாள் புறப்பாடு நடைபெறும்.
காளி வேடம் அணிந்த ஏராளமான பக்தர்களும் அன்னையுடன் அங்கு அணிவகுத்துச் செல்வார்கள். அங்குதான் மகிசாசுரவதம் நடைபெறும். பண்டிகையின் கடைசி கட்டமாக விஜயதசமி அன்று கடற்கரையில் மகிஷாசுர சம்காரம் நடைபெறும். காளி மகாகாளியான முத்தாரம்மன் உலக மக்களை பெரிதும் துன்புறுத்தி அநியாயங்கள் புரிந்து வந்த முத்தாரம்மன் மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க செய்வதாக அமையும்.
முதலில் மகிசனின் தலையினை அம்பாள் கொய்துவிடுவாள். அடுத்து சிம்மத் தலையினையும், பின்னர் மகிசாசுரனின் தலையினையும் கொய்து வெற்றிக் கொடி நாட்டுவாள். உலகில் தர்மத்தைக் காத்து, அதர்மத்தை அடியோடு வீழ்த்த இந்த வதையை அம்பாள் செய்வதாக ஐதீகம். அதன்பிறகு மேடையில் அம்பாள் எழுந்தருளுவாள்.
இந்த வெற்றியைக் கொண்டாடும்விதமாக பக்தர்கள் வாணவேடிக்கை நடத்தி மகிழ்ச்சி கடலில் திளைப்பார்கள். இதனையடுத்து, சிதம்பரேசுவரர் ஆலயத்தை வந்தடையும் அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அடுத்த நாள் அதாவது பதினோராவது காலை பூஞ்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள் புரிவாள்.
மாலை கோவிலை அம்பாள் வந்தடைந்த பின்னரே, கொடி இறக்கப்படும். அதன்பிறகு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளைக் களைந்து விடுவார்கள். இரவில் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். 12-வது நாள் முற்பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம், குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும்.
அத்துடன் தசரா விழா சிறப்பாக நிறைவடையும். தசரா திருவிழா நடைபெறும் நாட்களில் இக்கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள், சமயச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கும்.

Wednesday, October 17, 2012

தசரா திருவிழா - குலசை முத்தாரம்மன்


அனைவரும் நினைவு கொள்வர். தமிழகத்தில் மைசூருக்கு நிகராக சுமார் பத்து லட்சம் முதல் 15 லட்சம் வரை கூடி வழிபடும் இடம் குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் ஆகும்.தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இத் தலம் கடந்த 25 ஆண்டுகளில் மிக அபரிதமான வளர்ச்சி கொண்டுள்ளது.அறுபடை வீடான திருச்செந்தூரிலிருந்து 13 கிமீ தூரத்தில் திருச்செந்தூர்-கன்னி யாகுமரி நெடுஞ்சாலையில் குலசேகரன்பட்டினம்றுமுகனேரி: தசராத் திருவிழாவென்றால் இந்தியாவில் மைசூரை
என்ற கடற்கரை கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.தென் தமிழகத்தில் சிறந்து விளங்கும் சக்தி தலங்களில் இது ஒன்றாகும்.இங்கு அம்மையும் அப்பனுமாக ஸ்ரீஞான மூர்த்தீஸ்வரரும் ஸ்ரீமுத்தாரம்மனும் சேர்ந்து சுயம்பாக பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.இயற்கை துறைமுகமாகவும் முன்பு ஏற்றுமதி இறக்குமதி போன்ற வணிகத்திற்கு துணையாக இருந்த நகர் தற்போது ஊராட்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் தொகையுடன் உள்ளது. அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இந்நகர் வழியாக பாண்டிய மன்னர்கள் இறக்குமதி செய்ததாகவும், இலங்கை மன்னனை வென்ற சோழ மன்னன் இந்நகர் வழியாக நாடு திரும்பியதாகவும் புராணம் கூறுகிறது.குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் திருக்காட்சி அளித்ததால் இநநகர் பெருநகராக மாற்றப்பட்டு மன்னன் பெயராலேயே குலசேகரன் பட்டணம் என்று அழைக்கப்படுகிறது.1934ஆம்  வருடத்திற்கு முன் இப்போது வழிபடும் மூல விக்ரகங்கள் இல்லை. சுயம்புவாக தோன்றி சுவாமி மற்றும் அமமன் விரகங்களே இருந்தன. சுவாமி அம்மன் பெரிய திருவடி அமைத்து வழிபட பக்தர்கள் எண்ணிய போது கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி குமரி மாவட்டம் மைலாடியில் சென்றால் உங்கள் எண்ணம் ஈடேறும் என்று வழிகாட்டியுள்ளார்.இதே போன்று மைலாடியிலுள்ள சுப்பையா ஆசாரி கனவிலும் தோன்றி ஒரே கல்லில் ஒரே பீடத்தில் சுவாமி அம்மனை அருகருகே அமைந்துள்ள ஆண்பாறை மற்றும் பெண் பாறையில் வடித்திடு என்றும், அதற்கான பாறை தெற்கு நோக்கி சென்றால் கிடைக்கும் என்றும் அவ்வாறு வடித்ததை குலசை மக்களிடம் வழங்கிடு என்றும் அம்மன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அம்மனே தேர்ந்தெடுத்த திருமேனிதான் இன்றும் பக்தர்கள் கோவிலில் வழிபடுகின்றனர்.இதே போன்று 17.10.1927ல் கோவிலில் அமைத்து இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கும் கோவில் மணியையும் அம்மனே ஏற்பாடு செய்ததுதான் என்கின்றனர்.குலசேகரன்பட்டினம் மலையன் தெருவில் மளிகை கடை நடத்தி வந்த சுப்பையா பிள்ளை கனவில் தோன்றிய அம்மன் அவரது கடைக்கு மறுநாள் வரும் உளுந்து மூட்டையில் இருக்கும் பணத்தைக் கொண்டு கோவிலுக்கு ஆலயமணி செய்து வைக்க பணித்தார்.அவ்வாறே மறுநாள் நடந்ததால் அம்மன் பணித்தபடி அவர் 35 படி கொள்ளவு கொண்ட 56 கிலோ எடையுள்ள மணியை வாங்கி கோவிலுக்கு வழங்கியதாக வரலாறு தெரிவிக்கிறது.பாண்டிய நாட்டில் சிறப்புற்று விளங்குவன முத்துக்களே. பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக வழிபட்டனர். அம்முத்துக்கள் அம்பாளாக திருமேனி கொண்டன. முத்துக்களிலிருந்து அம்மன் உதித்ததால் முத்தாரம்மன் என அம்மன் அழைக்கப்படுகிறார்.இஙகு நவராத்திரி திருவிழாதான தசராத் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.புரட்டாசி மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் பிரமை திதியில் கொடியேற்றி 12 தினங்கள் கொண்டாடப்படுகிறது.அம்மன் தினசரி பல்வேறு கோலத்தில் காட்சி தருவார்.பத்தாம் திருவிழா அதாவது தசரா தினத்தன்று அம்மன் மகிசாசுர வர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்கிறான்.முனிவராக துவங்கிய வரமுனி தனது பிற்காலத்தில் அசுரனாகி வாழ்வை நடத்தியதால் அந்த மகிஷாசூரனினை அழிக்க முனிவர்கள் வேண்ட பராசகதி அழிக்கின்றார்.அந்த நாள்தான் தசரா திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது.முன்பு குலசேகரன்பட்டினம் ஊருக்குள் நெருக்கமான சந்தில் நடைபெற்ற மகிஷாசூர சம்ஹாரம் தற்போது கடற்கரையில் சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு நடைபெறுகிறது.இந்த திருவிழாவிற்காக பக்தர்கள் பத்து நாட்கள் முதல் 40 நாட்கள் வரை விரதம் இருந்து வேடமிட்டு காணிக்கை பெற்று திருக்கோவிலில் சேர்க்கின்றனர்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 10 முதல் 15 லட்ச பக்தர்கள் தசரா திருவிழாவின்போது குவிகின்றனர்.முன்பு மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தசரா குழுக்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும். இப்போது ஆயிரக்கணக்கான குழுக்கள் வேடம் தரித்து வந்து கலந்து கொள்கின்றன.முன்பு வீரைவளநாடு என்று அழைக்கப்பட்ட குலசேகரன் பட்டினம் என்ற கிராமத்தில் லட்சக்கணக்கான பக்தர்களை அழைக்கும் அம்மன் அனைவருக்கும் அருள் பாளிப்பாள்.     

குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா 2008

குலசை முத்தாரம்மன் கோவில்

குலசை முத்தாரம்மன் சூரசம்ஹாரம் 2008

Monday, October 15, 2012

குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் பக்தர்கள் காப்பு கட்டினர்


உடன்குடி, அக். 15-

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வீதி உலாவும், 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதன் பின் 9 மணியளவில் கொடியேற்றப்பட்டது. கொட்டும் மழையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கொடியேற்றம் நடந்த பின்னர் காப்பு கட்டினர். மஞ்சள் கயிறால் ஆன காப்பை பூசாரி அவர்களுக்கு கட்டினார். வேடம் அணியும் பக்தர்கள் இன்று முதல் ஊர், ஊராக சென்று காணிக்கை பெறுவார்கள். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா களைகட்ட தொடங்கிவிட்டது. தசரா விழாவையொட்டி தொடர்ந்து 9 நாட்களுக்கு காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தினமும் இரவு 9 மணிக்கு அம்மன், சிம்மம், ரிஷபம், மயில், கற்பகவிருட்சம், காமதேனு, பஞ்சபரம், கமலம், அன்ன வாகனங்களில் துர்க்கை, விஷ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிஷாசுரமர்த்தினி, ஆனந்தநடராஜர், கஜலட்சுமி, கலைமகள் ஆகிய அலங்காரங்களில் வீதி உலா நடைபெறும்.

10-ம் திருநாள் (அக். 24-ந் தேதி) அன்று காலை 6 மற்றும் 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 10.30 மணிக்கு மஹா அபிஷேகமும் நடைபெறும். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைக்கு பின்னர் 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மறுநாள் நள்ளிரவு 1 மணிக்கு அம்மன் கடற்கரை மேடையில் எழுந்தருள்வார். அங்கு அம்மனுக்கு காலை 5 மணிவரை அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

வேடம் அணிந்து விரதம் கடைபிடித்த பக்தர்கள் காப்புகளை களைந்து தங்கள் விரதத்தை முடிப்பர். விழா நாட்களில் தினமும் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கோவில் கலையரங்கில் நடைபெறும்.