குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தசரா திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.
வெம்மையால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆற வைப்பதால் முத்தாரம்மன் என்றும், முத்துக்களை ஆரமாக அணிந்தவள் என்பதால் முத்தாரம்மன் என்றும் அன்னை பலவாறாக பெயர்காரணம் பெறுகின்றாள்.
அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீசுவரர் சமேதராய் அம்மையும், அப்பனுமாக ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி, மற்ற கோவில்களில் காண இயலாத அற்புத காட்சியாகும். வினை மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து வழிபட்டு தம் குறைகள் நீங்க பெறுகின்றனர். நவராத்திரி விழாவே இங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது ஹரிஷ் பட்டர் அமர்ந்து, கொடிப்பட்டத்தை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 8.45 மணிக்கு கோவில் கொடிமரத்தில் மகாராஜா சிவாச்சாரியார் கொடியேற்றினார். பின்னர் கொடிமரத்துக்கு மஞ்சள், மாபொடி, சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
திருக்காப்பு அணிவித்தல்
பின்னர் ஹரிஷ் பட்டர், விரதம் இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு என்ற திருக்காப்பு அணிவித்தார். மேலும் திருக்காப்பு அணிந்த பக்தர்கள் தங்களது ஊர்களில் விரதம் இருந்து வரும் மற்ற பக்தர்களுக்கு அணிவிப்பதற்காக திருக்காப்பு வாங்கி சென்றனர்.
ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள் அங்குள்ள கோவில் அருகில் காளி பறை என்ற குடிசை அமைத்து தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர். மேலும் அவர்கள் நேர்த்திக்கடனாக காளி, அனுமார் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து 10–ம் திருநாள் இரவில் கோவிலில் செலுத்துவார்கள்.
துர்க்கை திருக்கோலத்தில் வீதி உலா
மதியம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவில் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வி.கோபால் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 2–ம் திருநாளான இன்று (புதன்கிழமை) இரவில் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா செல்கின்றார்.
22–ந்தேதி, சூரசம்ஹாரம்
10–ம் திருநாளான வருகிற 22–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசுரனை வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.
11–ம் திருநாள் அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள், 3 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து, திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வந்தடைகிறார். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுதல், மாலையில் அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
12–ம் திருநாளான 24–ந்தேதி (சனிக்கிழமை) காலையில் அபிஷேக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், தூத்துக்குடி உதவி ஆணையருமான மொ.அன்னக்கொடி, நெல்லை இணை ஆணையர் இர.பச்சையப்பன், நிர்வாக அதிகாரி இர.ச.வெங்கடேஷ் ஆகியோர் செய்து உள்ளனர்.
No comments:
Post a Comment