முத்தாரம்மன் கோவில்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், பிரசித்தி பெற்ற ஞானமூர்த்தீசுவரர்சமேத முத்தாரம்மன் கோவில் அமைந்திருக்கிறது.
இந்த கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா சிறப்பு பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினத்தில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தசரா விழாவை சிறப்பிக்கின்றனர்.
அதாவது, பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். வெம்மையால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆற வைப்பதால் முத்தாரம்மன் என்றும், முத்துக்களை ஆரமாக அணிந்தவள் என்பதால் முத்தாரம்மன் என்றும் அம்மனை அழைக்கிறார்கள்.
அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீசுவரர் சமேதராய் ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி, மற்ற கோவில்களில் காண இயலாத அற்புதமாகும். வினை மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து வழிபட்டு தம் குறைகளை நீங்க பெறுகின்றனர். நவராத்திரி விழாவே இங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-ம் திருநாளான நேற்று இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சிஅளித்தார்.
நாளை சூரசம்ஹாரம்
9-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார்.
10-ம் திருநாளான நாளை காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிசாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. அதை லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, பக்தி பரவசத்துடன் கண்டு தரிசிப்பார்கள்.
தசரா திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து, காப்பு கட்டிய பக்தர்கள் காளி, அனுமன், கிருஷ்ணர், ராமர் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூல் செய்து, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் செலுத்துவார்கள்.
தசரா குழுவினர்
வேடம் அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழு அமைத்தும், பல்வேறு ஊர்களுக்கு சென்றும் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். அப்போது ஒவ்வொரு ஊரிலும் கரகாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர். இதனால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் தசரா திருவிழா களைகட்டி உள்ளது.
10-ம் திருநாள் இரவில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் அனைத்து தசரா குழுவினரும் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் விடிய விடிய கலைநிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
பக்தர்கள் குவிந்தனர்
தசரா திருவிழாவையொட்டி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.