Monday, October 7, 2013

குலசை முத்தாரம்மன் திருக்கோவில் வரலாறு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் ( திருச்சீரலைவாய் ) மாநகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கடற்கரை சாலையில் தன் சகோதரிகளான அட்டகாளிகளுடன் முத்தாரம்மன் அருளாட்சி புரியும் இடம் தான் குலசேகரன்பட்டினம். திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ தொலைவில் அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரருடன் அன்னை முத்தாரம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 25 வருடங்களுக்கு முன்பு வரை கோவில் உள்ளூர் மக்கள் வழிபடும் ஸ்தலமாகத்தான் இருந்தது.
புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி காலங்களில் மட்டும் சில ஊர்களில் இருந்து மக்கள் உடலில் அம்மன் ( முத்து முத்தாக அம்மன்கண்டு ) வந்தால் அதை குணப்படுத்துமாறு வேண்டி கொண்டு அப்படி குணம் கிடைத்தவுடன் அவர்கள் ஊரில் ஐந்து அல்லது பத்து வீடுகளில் தர்மம் எடுத்து அந்த காணிக்கையை முத்தாரம்மனுக்கு செலுத்தி தங்கள் நன்றியையும் அம்மனுக்கு செலுத்துவதை வாடிக்கையாக மேற்கொண்டு இருந்த காலத்தில் சிலர் தங்களின் கஷ்டம், நோய் , நீங்கவும் செல்வம் வேண்டியும் வந்து வழிபாடு செய்துள்ளனர், கேட்டவருக்கு கேட்ட வரத்தை இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுத்தாள் அன்னை, தன்னைத்தேடி வரும் மக்களுக்கு எல்லா செல்வங்களையும் பாகுபாடு இல்லாமல் உண்மையான அன்போடு அளித்ததனால், அம்மனின் புகழ் பக்கத்து கிராமத்தில் இருந்து பக்கத்து மாவட்டத்திற்கும் சென்றது, பக்கத்து மாவட்டத்தில் இருந்து அடுத்த மாநிலத்திற்கு சென்று நாடு விட்டு செல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஒவ்வொரு ஊரின் கோவில் சிறப்பையும் அந்த ஊரில் இருக்கும் மக்கள் தான் பிரபலமாக பேசுவதுன்டு ஆனால் முத்தாரம்மனின் சிறப்பை எந்த ஊரில் எல்லாம் முத்தாரம்மனின் பக்தர்கள் இருக்கிறார்களோ அவர்களே சொல்வார்கள்.

கோவில் அமைப்பு

அன்னை முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள்புரியும் காட்சி காண கிடைக்காத ஒன்று. கர்ப்பக்கிரகத்தில் சுவாமி மற்றும் அம்பாள் இருவரும் சுயம்புவாக தோன்றி திருமேனிகள் சிறிய அளவில் இன்றளவும் உள்ளது, ஒரே கல்லில் அன்னையும் அப்பனும் சேர்ந்து அருள்பாலிக்கும் அற்புத ஸ்தலம். அன்னையின் சிரசில் ஞானமூடி சூடி கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து , மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் அணிந்து , கழுத்தில் தாலிக்கொடியுடனும், வலது காலை மடித்து சந்திரகலையுடன் கேட்டவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்து கொண்டிருக்கிறாள் நம் அன்னை முத்தாரம்மன். அருகில் அமர்ந்திருக்கும் அப்பன் ஞானமூர்த்திஸ்வரர் ஒரு கையில் செங்கோல் ( கதாயுதம் ) தாங்கியும் மறுகையில் விபூதி கொப்பரையும் வைத்து இடது காலை மடித்து சூரியகலையுடன் பக்தர்களுக்கு கேட்ட வழக்கு மற்றும் எதிரி பிரச்சினைகளில் வெற்றியை கொடுக்கிறார். கோவிலின் மகா மண்டபத்திற்குள் பேச்சியம்மன், கருப்ப சுவாமி, பைரவர் ஆகியோரும் சிலைவடிவாக காட்சி அளிக்கின்றனர், கோவில் எதிரில் அமர்ந்திருக்கும் கொடிமரம் 32 அடி உயரம் கொண்டது. செப்புத்தகட்டினால் கொடிமரம் வேயப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment