Monday, October 14, 2013

தசரா விழா கோலாகலம்: குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு சூரசம்ஹாரம் kulasekarapattinam dasara festival surasamharam

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கடந்த 5–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்புக் கட்டி பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலித்தனர். சுமார் 500–க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கரகாட்டம், குறவன்– குறத்தி ஆட்டம், பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். இதனால் நெல்லை– தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன.

Monday, October 7, 2013

குலசை முத்தாரம்மன் திருக்கோவில் வரலாறு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் ( திருச்சீரலைவாய் ) மாநகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கடற்கரை சாலையில் தன் சகோதரிகளான அட்டகாளிகளுடன் முத்தாரம்மன் அருளாட்சி புரியும் இடம் தான் குலசேகரன்பட்டினம். திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ தொலைவில் அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரருடன் அன்னை முத்தாரம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 25 வருடங்களுக்கு முன்பு வரை கோவில் உள்ளூர் மக்கள் வழிபடும் ஸ்தலமாகத்தான் இருந்தது.
புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி காலங்களில் மட்டும் சில ஊர்களில் இருந்து மக்கள் உடலில் அம்மன் ( முத்து முத்தாக அம்மன்கண்டு ) வந்தால் அதை குணப்படுத்துமாறு வேண்டி கொண்டு அப்படி குணம் கிடைத்தவுடன் அவர்கள் ஊரில் ஐந்து அல்லது பத்து வீடுகளில் தர்மம் எடுத்து அந்த காணிக்கையை முத்தாரம்மனுக்கு செலுத்தி தங்கள் நன்றியையும் அம்மனுக்கு செலுத்துவதை வாடிக்கையாக மேற்கொண்டு இருந்த காலத்தில் சிலர் தங்களின் கஷ்டம், நோய் , நீங்கவும் செல்வம் வேண்டியும் வந்து வழிபாடு செய்துள்ளனர், கேட்டவருக்கு கேட்ட வரத்தை இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுத்தாள் அன்னை, தன்னைத்தேடி வரும் மக்களுக்கு எல்லா செல்வங்களையும் பாகுபாடு இல்லாமல் உண்மையான அன்போடு அளித்ததனால், அம்மனின் புகழ் பக்கத்து கிராமத்தில் இருந்து பக்கத்து மாவட்டத்திற்கும் சென்றது, பக்கத்து மாவட்டத்தில் இருந்து அடுத்த மாநிலத்திற்கு சென்று நாடு விட்டு செல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஒவ்வொரு ஊரின் கோவில் சிறப்பையும் அந்த ஊரில் இருக்கும் மக்கள் தான் பிரபலமாக பேசுவதுன்டு ஆனால் முத்தாரம்மனின் சிறப்பை எந்த ஊரில் எல்லாம் முத்தாரம்மனின் பக்தர்கள் இருக்கிறார்களோ அவர்களே சொல்வார்கள்.

கோவில் அமைப்பு

அன்னை முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள்புரியும் காட்சி காண கிடைக்காத ஒன்று. கர்ப்பக்கிரகத்தில் சுவாமி மற்றும் அம்பாள் இருவரும் சுயம்புவாக தோன்றி திருமேனிகள் சிறிய அளவில் இன்றளவும் உள்ளது, ஒரே கல்லில் அன்னையும் அப்பனும் சேர்ந்து அருள்பாலிக்கும் அற்புத ஸ்தலம். அன்னையின் சிரசில் ஞானமூடி சூடி கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து , மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் அணிந்து , கழுத்தில் தாலிக்கொடியுடனும், வலது காலை மடித்து சந்திரகலையுடன் கேட்டவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்து கொண்டிருக்கிறாள் நம் அன்னை முத்தாரம்மன். அருகில் அமர்ந்திருக்கும் அப்பன் ஞானமூர்த்திஸ்வரர் ஒரு கையில் செங்கோல் ( கதாயுதம் ) தாங்கியும் மறுகையில் விபூதி கொப்பரையும் வைத்து இடது காலை மடித்து சூரியகலையுடன் பக்தர்களுக்கு கேட்ட வழக்கு மற்றும் எதிரி பிரச்சினைகளில் வெற்றியை கொடுக்கிறார். கோவிலின் மகா மண்டபத்திற்குள் பேச்சியம்மன், கருப்ப சுவாமி, பைரவர் ஆகியோரும் சிலைவடிவாக காட்சி அளிக்கின்றனர், கோவில் எதிரில் அமர்ந்திருக்கும் கொடிமரம் 32 அடி உயரம் கொண்டது. செப்புத்தகட்டினால் கொடிமரம் வேயப்பட்டுள்ளது.

ஊர் ஒற்றுமைக்கு ஒரு திருவிழா!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலின் புகழ்பெற்ற தசரா திருவிழா...  இந்தத் திருவிழாவுக்குப் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வேடமணிந்து  தனியாகவும், குழுவாகவும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். தசராக் குழுவை பொறுத்தவரை முன்பு உடன்குடி வட்டாரத்தில் உள்ள ஒரு சில ஊர்களில்தான் இருந்தது. ஆனால் இன்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் ஆயிரக்கணக்கான தசராக் குழுக்கள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழா. இந்த 10 நாட்களும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் லாரிகள், குட்டியானைகளுக்குக் கடும் கிராக்கியாக இருக்கும். இந்தக் குழுவினர் லாரிகளிலும் குட்டியானைகளிலும் ஏறிக்கொண்டு, ''ஓம் காளி.. ஜெய் காளி... எங்கம்மா முத்தாரம்மா... குலசை அம்மா முத்தாரம்மா!'' என்ற கோஷத்தோடு  ஊர் ஊராகச் சென்று செட் அடித்து காணிக்கை வசூலிப்பார்கள்.

 ஒரு தசரா குழு ஏன் அமைக்கப்படுகிறது என்பதுபற்றி குலசை முத்தாரம்மன்
கோயில் முன்னாள் அறங்காவலரும் தாண்டவன்காடு அம்பிகை தசராக் குழுவின் உறுப்பினருமான வே.கண்ணன் பேசியதில்... ''முன்பு எல்லாம், ஒரு ஊர்ல ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் மாலை போட்டு வேஷம் கட்டிட்டுக் கோயிலுக்குப் போவாங்க. ஆனால், அம்மன் அருளால் இப்போ ஒரு ஊர்ல இருந்து நெறைய பேர் வேஷம் கட்டுறாங்க. அதனால, எல்லோரும் தனித்தனியாகக் கோயிலுக்குப் போறதைவிட ஒரு குழுவை அமைச்சு எல்லோரும் ஒற்றுமையாபோனா நல்லதுங்கிற நோக்கத்தோட  ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த தசராகுழு.

குலசை முத்தாரம்மன் வழிபாடுகளும், பலன்களும்

பொங்கல் வைத்து வழிபடுவது குலசையில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவென்றால் ஆன்மாவினுள் புகுந்து நம்மைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் அகங்காரம், ஆணவம்,. கோபம்,. மோகம் உள்ளிட்டவைகளை அன்னமாக வேகவைத்து இறைவனுக்குச் சமர்ப்பனம் செய்வது என்பதே.

இதன் மூலம் நமது ஆன்மா சுத்திகரிக்கப்பட்டு தூய்மை பெறுகிறது என்பது நம்பிக்கை,. அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் அதனால் ஏற்படும் பலன்கள் அளவிடற்கரியது.

எண்ணெய், மாப்பொடி, நெல்லிப்பொடி, மஞ்சபொடி பஞ்சகவ்வியம் பஞ்சா மிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம்  பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்கும்.

விளக்கு வழிபாடும் இங்கு நடைபெறுகிறது. ஐம்பூதங்களில் நெருப்பும் ஒன்று. இறைவனை தீ வடிவில் வழிபாடு செய்தால் அனைத்து நலன்களையும் பெற்றுய்யலாம் என்பதே இதன் தத்துவம். எனவே தான் பவுர்ணமி திதியில் இத்திருத்தலத்தில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை செய்கின்றனர்.

குலசை முத்தாரம்மன் கோயிலை தரம் உயர்த்த வேண்டும்

உடன்குடி:குலசேகரன்பட்டணம்
முத்தாரம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் நிர்வாகத்தில்
செயல்படும் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என அனைத்து சமுதாய மக்கள்
நலச்சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.குலசேகரன்பட்டணம் அனைத்து
சமுதாய மக்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு
சங்கத்தின் தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். துணைச்செயலாளர்கள்
குருசாமி, வெங்கடாச்சலம், அமைப்பு செயலாளர் கிஸார் சாகுல்ஹமீது, மகளிர் அணி
செயலாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுடலைமணி
வரவேற்றார்.கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள்
நிறைவேற்றினர்.குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழகத்தில் தசரா
திருவிழாவில் முதலிடம் வகிக்கிறது. தசரா திருவிழாவின்போது இந்தியா
முழுவதும் இருந்து சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள்
வருகைதருகின்றனர். மேலும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள்
வருகைதருகிறார்கள். தற்போது ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் வருகிறது. ஆனால்
இக்கோயிலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தரம் உயர்த்தாமல் உள்ளனர்.
இதனால் கோயிலில் பல அடிப்படையான பணிகள் நடைபெறாமல் உள்ளது. உடனடியாக குலசை
முத்தாரம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் நிர்வாகத்தில்
செயல்படும் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும். குலசை பொது மக்களுக்கும்,
பக்தர்களுக்கும் இடையூறாக யாருக்கும் பயன்படாமல் சமூக விரோத செயல்
நடைபெறும் இடமாக மாறிவரும் பழுதடைந்த போலீஸ் குடியிருப்புகளை உடனே
அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பல லட்சம் பக்தர்கள் வரும்
இக்கோயிலைச்சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. உடனடியாக
ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவடைந்த சிறு, குறு
விவசாயிகளுக்கு இங்குள்ள தொடக்க கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கி
வருகின்றனர். அதனால் இங்குள்ள முத்தாரம்மன் கோயில் உண்டியல் பணத்தில்
மூன்றில் ஒரு பங்கு பணத்தை தொடக்க கூட்டுறவு வங்கியில் டெப்பாசிட் செய்ய
கோயில் அதிகாரிகளை கேட்டுக்கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடம் அணிந்த பக்தர்கள் காணிக்கை வசூல் kulasekarapattinam dasara festival devotees prayer

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடம் அணிந்த பக்தர்கள்  காணிக்கை வசூல் kulasekarapattinam dasara festival devotees prayer

Tamil NewsToday,

தூத்துக்குடி, அக். 7-
நெல்லை – தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஊர்களில் வேடம் அணிந்த குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் வீதி வீதியாக சென்று அன்னை முத்தாரம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெரும் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமாக வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான குரங்கு, கரடி வேடங்களை அதிகமானோர் போட்டுள்ளனர். காளி, சிவன், முருகன், கிருஷ்ணன் போன்ற சுவாமி வேடங்கள் உட்பட பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி அன்னை முத்தாரம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

இதனால் நெல்லை–தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா திருவிழா களை கட்டியுள்ளது.

இப்படி வசூல் செய்யும் காணிக்கைகளை பக்தர்கள் வருகின்ற 14ம் தேதி திங்கட்கிழமை 10ம் திருநாளில் கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்காரம் நடைபெறும்.

இதை காண பல லட்சம் மக்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள். அன்று திரும்பிய திசையெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பார்கள்.

...
Show commentsOpen link