Wednesday, September 20, 2017

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை                (21-09-2017) வியாழக்கிழமை தசரா திருவிழா தொடங்குகிறது.

காப்பு கட்டுதல்
தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோவில்களில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு கொண்டாடப்படும் நவராத்திரி தசரா பெரும் விழா பிரசித்திபெற்றது.
இந்த ஆண்டு திருவிழாவை யொட்டி இன்று (20-10-2017 )புதன்கிழமை  நண்பகலில் காளி பூஜை நடக்கிறது. தொடர்ந்து காளி பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மகுட இசை, இரவு 8 மணிக்கு கரகாட்டம், 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கொடியேற்றம்
நாளை (வியாழக்கிழமை) காலையில் கொடி ஏற்றம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வைத்து ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். அதன் பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிசேகங்கள், சிறப்பு பூஜைகளுடன் தசரா திருவிழா தொடங்குகிறது.
காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழுசார்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.
அதனை தொடர்ந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அர்ச்சகர் கையினால் தங்களது வலது கையில் மஞ்சள் கயிற்றிலான காப்பை கட்டிக்கொள்வார்கள். அதன் பின்னர் அவர்கள், தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர்ஊராக சென்று அம்மனின் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். 10–ம் திருநாள் அன்று தாங்கள் வாங்கிய காணிக்கையை கோவிலுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
அம்மன் விதி உலா
தசரா திருவிழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிசேகங்களும், 29–ந்தேதி வரை மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.
மாலை 4 மணி முதல் சமய சொற்பொழிவு பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் ஒரு திருக்கோலத்தில் இரவு 9 மணிக்கு அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்வழங்குகிறார்.
சூரனை  வதம் செய்யும் சூரசம்காரம்
10–ம் திருநாளான வருகிற 30–ந்தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்வார். அங்கு மகிசாசூரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண அன்று காலை முதல் இரவு விடிய விடிய பல லட்சம் பக்தர்கள் கடற்கரையில் திரள்வார்கள். விடிய விடிய குலசேகரன்பட்டினத்தில் 500–க்கும் மேற்பட்ட தசரா குழுவினர்கள் ஆங்காங்கே கலை நிகழ்ச்சி நடத்துவார்கள். திரும்பும் திசைகளில் எல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே தெரிவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையாளரும் கோவில் தக்காருமான ரோஜாலிசுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்
.                  அனைவரும் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் அருள் பெறுக 

No comments:

Post a Comment