Thursday, October 18, 2018

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா 10–ம் நாள் திருவிழா 2018


குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

தசரா திருவிழா 


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து வழிபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருந்து வருகின்றனர்.

வேடம் அணிந்த பக்தர்கள் 


விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.

ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. விரதம் இருந்து காப்பு அணிந்த சில பக்தர்கள் தசரா திருவிழாவின் கடைசி சில நாட்கள் மட்டும் வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, கோவிலில் செலுத்துவார்கள். இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

நாளை மறுநாள், சூரசம்ஹாரம் 


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 6–ம் நாளான திங்கள் கிழமை   இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7–ம் நாளான செவ்வாய்  இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

10–ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்
.

Tuesday, October 16, 2018

குலசை தசரா திருவிழா: 2018

குலசை தசரா திருவிழா:
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற புரட்டாசி மாதம் 24ம் நாள் (10.10.2018) புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகியது . இதையொட்டி புரட்டாசி மாதம் 23ம் நாள் அக்டோபர் 9ந்தேதி மதியம் 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது 
கொடியேற்றம்:
முதலாம் திருநாளான அக்டோபர் 10ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா, காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நடைப்பெற்றது . விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவில் அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
10/10/2018:
1-ம் திருநாள் இரவில் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலம்
11/10/2018:
2–ம் திருநாள் இரவில் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலம்.
12/10/2018:
3–ம் திருநாள் இரவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம்.
13/10/2018:
4–ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம்.
14/10/2018:
5–ம் திருநாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலம்.
15/10/2018:
6–ம் திருநாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலம்.
16/10/2018:
7–ம் திருநாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம்.
17/10/2018:
8–ம் திருநாள் இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலம்.
18/10/2018:
9–ம் திருநாள் சரஸ்வதி பூஜை அன்று இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம்.
19/10/2018:
(சூரசம்காரம்)
10–ம் திருநாளான ஐப்பசி 2ம் நாள் அக்டோபர் 19ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசுரனை வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.
20/10/2018:
11–ம் திருநாள் அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலுக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் முடிந்து, அதிகாலை 3 மணிக்கு திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வந்தடைகிறார்.
பாலாபிஷேகம்:
காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
21/10/2018:
12–ம் திருநாளான அக்டோபர் 21ந்தேதி (ஞாயிறுக்கிழமை ) காலையில் அபிஷேக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.