Monday, September 22, 2014

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - 2014


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற புதன்கிழமை  (24-09-2014) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.










முத்தாரம்மன் கோவில்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். வெம்மையால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆற வைப்பதால் முத்தாரம்மன் என்றும், முத்துக்களை ஆரமாக அணிந்தவள் என்பதால் முத்தாரம்மன் என்றும் அன்னை பலவாறாக பெயர்க்காரணம் பெறுகின்றாள். அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீசுவரர் சமேதராய் அம்மையும், அப்பனுமாக ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கோவில்களில் காண இயலாத அற்புத காட்சியாகும்.

வினை மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து வழிபட்டு தம் குறைகள் நீங்க பெறுகின்றனர். நவராத்திரி விழாவே இங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

புராணக்கதை

தசரா திருவிழாவுக்கு பின்னணியாக புராணக் கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் தவ வலிமை மிக்கவராக இருந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக வந்த அகத்திய மாமுனிவரை தன்னுடைய ஆணவத்தால் வரமுனி மதிக்க தவறியதோடு அவமரியாதையும் செய்தார். மனம் நொந்த தமிழ் ஞானி அகத்தியர், வரமுனியை எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக என சாபமிட்டார்.

அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமை தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். பின்னர் தனது விடா முயற்சியால் பற்பல வரங்களை பெற்றார். முனிவராக வாழ்வை தொடங்கிய வரமுனி தனது வாழ்வில் பிற்பகுதியில் அசுரனாக நடத்தினார். மகிஷாசுரனின் இடையூறுகளை தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிஷனின் கொடுமைகளை நீக்கி தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் இருந்து தோன்றிய அன்னை பராசக்தி, மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டாள். மகிஷாசுரனை அழித்த 10–ம் நாள் தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிக் கொண்டாடும் இவ்விழா தமிழகத்திலேயே சிறப்பு பெற்று விளங்குகிறது.

கொடியேற்றம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோலிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 24–ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வருகிற 23–ந்தேதி மதியம் 12 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.

முதலாம் திருநாளான 24–ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா, காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

முதலாம் திருநாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் திருவீதி உலா செல்கின்றார். 2–ம் திருநாள் இரவில் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா செல்கின்றார்.

3–ம் திருநாள் இரவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா செல்கின்றார். 4–ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா செல்கின்றார்.

5–ம் திருநாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா செல்கின்றார். 6–ம் திருநாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா செல்கின்றார். 7–ம் திருநாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா செல்கின்றார். 8–ம் திருநாள் இரவில் கமல வாகனத்தில் கசலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா செல்கின்றார். 9–ம் திருநாள் இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா செல்கின்றார்.

சூரசம்ஹாரம்

10–ம் திருநாளான வருகிற 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசுரனை வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.

11–ம் திருநாள் அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள், 3 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து, திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வந்தடைகிறார்.

பாலாபிஷேகம்

காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுதல், மாலையில் அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12–ம் திருநாளான 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அபிஷேக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும் உதவி ஆணையருமான க.செல்லத்துரை, நெல்லை இணை ஆணையர் ம.அன்புமணி, நிர்வாக அதிகாரி ச.கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Thursday, September 11, 2014

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா இந்த ஆண்டு  புரட்டாசி  8-ம் தேதி  (24-09-2014 ) அன்று  கொடியேற்றத்துடன்  தொடங்குகிறது , காளி வேடம்  அணியும்  பக்தர்கள் 40 நாட்களுக்கு முன்பே மாலை அணிந்து விட்டார்கள்